சனி, 13 ஜூலை, 2013

                    புதுக்கோட்டை கவிஞர் மன்றத்தின் திங்கள் கூட்டம் 13.07.2013 அன்று புதுக்கோட்டையில் நடைபெற்றது.

                   கவிராசன் இலக்கிய மன்றத் தலைவர் கவிஞர் நா.கண்ணன் தலைமையேற்றார். கவிஞர் மன்ற நிறுவனர் நிலவை பழனியப்பன் அனைவரையும் வரவேற்றார்.

                   பாவலர் பொன்.கருப்பையா, கவித்தேர் நிகழ்வினை,“ தாய்“ பாடலுடன் தொடங்கி வைத்தார். தொடக்க உரையில் அண்மையி்ல் முனைவர் பட்டம் பெற்ற வீ,கே. கஸ்தூரிநாதன்  சிறப்புகளைச் சொல்லிப் பாராட்டினார்., கவிஞர் மன்றம் அவ்வக்கால சமூக நிகழ்வுகளின் பாதிப்புகளைப் பதிவு செய்ய வேண்டியதையும் வலியுறுத்தினார். 

                  கவிஞர்கள் புலவர் மா.நாகூர், பொன்னுச்சாமி,  உப்பைத் தமிழ்க் கிறுக்கன், சுகுமாறன், கண்ணதாசன், கண்ணன் , முனைவர் வீ.கே.கஸ்தூரி நாதன் ஆகியோர் கவித் தேரின் வடம் பிடித்தனர்.

                 எழுத்தாளர்    ந. சோலையப்பன் அவர்களின்“ மாமனிதன்சிறுகதை சென்னை சிறுகதைப் போட்டியில் இரண்டாம் பரிசு பெற்றமை பாராட்டப் பெற்றது.

                 கண்ணதாசன் நன்றி கூறினார்.

கவித்தேரில் வலம் வந்தவை
ஏன் இந்த சாதித் தொல்லை?
உடலுக்குச் சாதி சொல்லி உலவுவோரே
உயிருக்குச் சாதி சொல்ல உதவுவீரோ?
தவறு செய்தோரைத் தட்டிக் கேட்டால்,
அவதூறு எனச் சொல்லி அணிதிரண்டு ஆர்ப்பரிப்பான்,
தட்டிக் கேட்டவனும் கோலெடுத்துக் கூடிடுவான்,
கரந்தையும் வெட்சியும் கண்கலங்கி நின்றிடும்!
காலத்தின் கோலத்தை மௌனமாய்ப் பார்த்திடும்!
இலஞ்சத்தில் சாதியில்லை - வேசியின்
மஞ்சத்தில் சாதியில்லை - வாக்கிற்கு
கொஞ்சலில் சாதியில்லை - செய்யும் 
வஞ்சத்தில் சாதியில்லை - சத்திரக் 
கஞ்சியி்ல் சாதியில்லை - உயிருக்குத் 
தஞ்சத்தில் சாதியில்லை - உனக்கேன் 
இந்தச் சாதித் தொல்லை?
உடலுக்குச் சாதி சொல்லி உலவுவோரே
உயிருக்குச் சாதி சொல்ல உதவுவீரோ?           
                                                                        -- புலவர் மா. நாகூர்


விவசாயத் தொழிலாளி...
மாட்டையும் ஓட்டி ஏரையும் புட்டி
மாடோடு மாடாய் உழைப்பார் - அவர்
மண்குடிசையிலே வசிப்பார்- அவர்
மண்ணானவர் பொன்னானவர்
கண்ணானவர் புண்ணானவர்
மாறா உழைப்பினால் கறுப்பார் - அவர்
மனம்விட்டு எப்போது சிரிப்பார்?

வாட்ட வடிவம் வளையக் குழைய
வாழ்நாள் வறுமையில் இழந்தார் - வேர்வை
வானத்து மேகமாய்ப் பொழிந்தார்- என்றும் 
தொலையாதுயர் அலைபோல்வர
மலையாமனம் உலைபோலிர
வாரிசையும் வாட்டிப் பிழிந்தார் - வஞ்ச
வலைப்பட்ட மான்போல நலிந்தார்.

காட்டையும் வெட்டி மேட்டையும் தட்டி

கழனியாய்  ஆக்கி உழுவார் - புளித்த
கஞ்சியைப் பார்த்து நெளிவார் - அந்தக் 
கடவுளை எந்நாளும் தொழுவார் - இந்த
இகமீதினில் அகவாழ்வினை
பகையேபெற அடடாஅட
சோகத்தினால் மனம் அழுவார் - கடன்
சுமைமாறி என்றைக்கு எழுவார்?

ஏட்டுச் சுரைக்காயின் கூட்டுக்கறிபோல
ஏலேலோ என்றவர் பாடு - உடம்பு
எலும்பெலும்பாகிய கூடு - அது
எண்ணைக் கொதிகருவாடு - என்றும்
கந்தைத்துணி பந்தப்பட
நெஞ்சக்குழி தந்தத்தன
எங்கும் அவரோட தேட்டு - அவர்
ஏக்கம் திறக்காத புட்டு    
                                                               - உப்பைத் தமிழ்க்கிறுக்கன்

திங்கள், 17 ஜூன், 2013

உலக அன்னையர் நாள்

அனைத்துலக அன்னையர் நாளில் அன்னையின் பெருமை பகரும்  பாடல்

                                             நெஞ்சம் மறக்குமோ?

கருவாய்நான்    உருவான    போதே - என்னைக் 
                     கருத்தாகக்      காத்து வளர்த்த      தாயே
இணையாக      உனக்கென்றும்       நீயே - நல்
                    ஏற்றமதை      ஊற்றாய்த்       தந்தாயே                      -- கருவாய்

உதிரத்தை    உருக்கிப்          பாலூட்டி             வளர்த்தாய்
உறங்கிட     வேஎனக்குத்    தாலாட்டு          இசைத்தாய்
உனக்குற்ற  சுகமெல்லாம் எனக்குள்ளே    புதைத்தாய்
உனக்கேதும்  கைம்மாறு   வருமென்றா     நினைத்தாய்?   -- கருவாய்

அம்மா    எனும்சொல்லால்    அதரத்தை     அசைத்தாய்
அப்பா     எனும்உறவை            அறிமுகம்      அளித்தாய்
அறிவினை   ஊட்டும்முதல்  ஆசானாய்     அமைந்தாய்
அரசாளும்    நிலைவரினும்  அவர்க்கென்றும்  நீயேதாய்   -- கருவாய்

நன்னெறியில்   பிள்ளைசெல்ல   நாளும்நீயே          உழைத்தாய்
நலங்கெட்டு      நலிந்தபோதும்   பிள்ளையென்றே அணைத்தாய்
நானிலத்தும்      நலம்பெருக           மனிதகுலம்          படைத்தாய்
நாள்தோறும்     வணங்கிடவே   நயந்துநெஞ்சில்   நிலைத்தாய்  -- கருவாய்

                                                                                              -- பாவலர் பொன்.கருப்பையா
                                                                                                             புதுக்கோட்டை

வியாழன், 25 ஏப்ரல், 2013

வாசிப்போம் புத்தகம் - உலகப் புத்தக நாள் -2013

அறிவைச்     செலுத்திடும்     ஆயுதம்       புத்தகம்
ஆற்றலைக்  கிளப்பியே   வளர்த்திடும்  புத்தகம்
இலக்கிய       இன்பத்தை     ஈந்திடும்          புத்தகம்
ஈட்டிடும்    செல்வத்துள்   ஏற்றமாம்        புத்தகம்
உலகத்தை உணர்த்திடும் உன்னதம்       புத்தகம்
ஊரெல்லாம்    ஓர்நிலை   காட்டிடும்        புத்தகம்
எளிமையாய் எதனையும் இயம்பிடும்   புத்தகம்
ஏற்றநல்    நண்பனாய்      என்றுமே           புத்தகம்
ஐயங்கள்  தீர்த்திடும்       அருமருந்து      புத்தகம்
ஒழுக்கத்தை ஊட்டிடும்  உயர்நெறி        புத்தகம்
ஓங்கிடும்   பாங்கினை   உரைப்பது         புத்தகம்
ஔடமாய் அறியாமைப் பிணிதீர்க்கும் புத்தகம்
கனிவுடன்  பேசிநல்     கைகோர்க்கும்    புத்தகம்
காலத்தின்  சீர்மையைக்  காட்டிடும்        புத்தகம்
சஞ்சலம்    தீர்த்திடும்     சஞ்சீவி                புத்தகம்
சாகாவரம்  பெற்ற           சரித்திரம்             புத்தகம்
தலைமுறைப் பண்பாட்டைக் காப்பது   புத்தகம்
தாங்கிடும்   வலிமையைத்   தருவது       புத்தகம்
நலமுறும்  வழிகளை   நவில்வது             புத்தகம்
நாளைய    மாற்றத்தின்  நறுந்துணை      புததகம்
பழமையில் புதுமையைக் காட்டிடும்       புத்தகம்
பாங்குற   மனிதத்தைக்   காத்திடும்           புத்தகம்
புரட்சியை இசைத்திடும் புல்லாங்குழல் புத்தகம்
புபாளம்   பாடிப்புதுத்     தெம்புட்டும்            புத்தகம்
மனதிற்குள்  மகிழ்ச்சியை  மலர்த்திடும்  புத்தகம்
மானுடப்  பண்பினை   வளர்த்திடும்          புத்தகம்
வரலாறு     காட்டிடும     வாயில்கள்           புத்தகம்
வாழ்க்கையை வளமாக்க  வாசிப்போம்  புத்தகம்     --- பாவலர் பொன்.க


                                                                                     அளவை

எல்லாம் இருக்கிறது
ஆனால்
எதுவும் இல்லை!
எல்லோரது வாழ்வும்
இப்படித்தான் இருக்கிறது!
வாழும்போது
 வாழ்க்கை புரியவில்லை
வாழ்க்கை முடிந்தபோது
வாழ்ந்ததே தெரியவில்லை
சரியாக வாழ்வதுதான்
 சரித்திரமாகும் என்று
தவறாமல் சொல்லுகிறோம்
தவறாகவே
வாழ்ந்து முடிக்கிறோம்
மோகப் பேய் என்றும்
மேகப்பேய் என்றும்
வேகமாய்ப் பெண்ணை
விமரிசனம் செய்கிறோம்
தாகம் எடுத்தால்
தண்ணீர் கேட்டுத் 
தாய்க்குலத்திடம்தான்
கையை நீட்டுகிறோம்
அத்தனை ஆண்களும் 
அயோக்கியர்கள் என்று
மொத்தமாய்ப் பெண்கள்
முனகுவது கேட்கிறது
அத்தனைக் காரணம்
அவர்கள் தானென்று
எத்தனை பேருக்கு
இங்கே உரைக்கிறது
இப்படியேதான் இங்கே
எல்லாம் நடக்கிறது
இருந்தும் வாழ்வு
யாருக்குப் புரிகிறது?
நாளும் பொழுதும் 
நாம் அனைவரும் 
அளந்து கொண்டுதான் இருக்கிறோம்
அடுத்தவர் வாழ்வை
நம்மை நாமே 
அளக்கும் நாள் என்று?
நல்லது அனைத்தும் 
நமக்கு வரும் அன்று.          -- கவிஞர் வீ.கே.கஸ்தூரிநாதன்

செவ்வாய், 9 ஏப்ரல், 2013

கவிஞர் மன்றத் திங்கள் தேரோட்டம்

 கவிஞர் மன்றத்தில் பாவலர் பொன்.க அவர்களின் பாடலைத் தொடர்ந்து, கவிஞர்கள்    துரைக்குமரன், முனைவர் சு.மாதவன், பேரா.சிவகவி காளிதாசு, பீர்முகம்மது, முத்துப் பாண்டியன், ஷெரீப், பொன்னையா, பொன்னுச்சாமி, புதுகை புதல்வன், சுகுமாரன், பெர்னாட்சா, புலவர் கு.ம.திருப்பதி, சுபாசு சந்திரபோசு, இராமச்சந்திரன், சோலையப்பன்,  ஆகியோர் கவிதைகள் வழங்கினர். 

அவற்றுள் சில...

தமிழன் எப்படிப் பொறுப்பான் - பல 
தடைகள்தாண்டிகருவறுப்பான்
எதிர்ப்புகளைக் கைகள் நசுக்கும்-பின்பு
எதிர்ப்பவரைத் தீயாய்ப் பொசுக்கும்

உண்மையைச் சொன்னால் கசக்கும் - பின்
உள்ளமும் அதனால் வெறுக்கும்
நன்மைகள் செய்தால் இனிக்கும் - அதில் 
நமக்கும் நன்மை கிடைக்கும்                                --- கவிஞர் நிலவை பழனியப்பன்

கண்டு   கொள்ளாதவரையும் 
கண்டு  கொள்கிறேன்     
கண்டு  கொள்வதுதானே பண்பாடு                       --- ஏழைதாசன்

யோக்கியதை

தமிழரின்
தருமம் வெல்ல வேண்டுமென்று
போராடுகிறார்கள்
தர்மபுரியை
அதர்மபுரி ஆக்கியவர்களும்

புத்தன் சிரிக்கிறான் 

சிங்களரில் பௌத்தரில்லை
தமிழரில் சைவருமில்லை                                    --- ஏழைதாசன்

குறுகுறுக்கவில்லையா?

கூட்டிலிருந்து விழும் குஞ்சுகளை மீட்டுத் தூக்க
கூட்டாகக் குரல் கொடுத்துக் கீச்சிடுது குருவியினம்
கட்டெறும்பு கடிக்குதென்று கவ்வித்தன் குட்டிகளை
காப்பாற்ற இடம் மாற்றும் கரிசனமாய் புனையினம்
நட்டநடு வீதியினில் நசுங்கிக் கத்தும் குட்டியினை
நாவினால் நக்கிமெல்ல நலங்கூட்டும் தெருநாய்கள்
கூண்டோடு தமிழினத்தை புவியறிய அழித்தபோதும்
கடல்மேவும் மீனவரைப் புடைத்தடித்துக் கொன்றபோதும்
துரும்பெதையும் அசைக்காமல் துடிப்பற்றுக் கிடக்கின்றாயே
குறுகுறுக்கா நெஞ்சமெனில் தெருநாய்க்கும் கீழாநீ       -- பாவலர் பொன்.க.

                                            உயர்திணையா?



 மலருக்குத் தெரியாது
தான் மணமாலையாவோமா? பிணம்மீது போவோமா என
மலைமுகடு அறியாது
தான் மண்துகளாய்ப் போவோமா? மதிப்புறுசிலை யாவோமா என
மண்ணுக்குந்தான் தெரியாது
தான் எரிமலையாய் ஆவோமா? இனியவளம் தருவோமா என
மழைநீரும் அறியாது
தான் விளைபயிருக்குப் பாய்வோமா? வெள்ளமாய்ப் பாய்ந்தழிப்போமா என
எரிசுடரும் அறியாது
தான் இருள்நீங்க ஒளிர்வோமா? எரித்துப் பொருள் அழிப்போமா என
காற்றுக்கும் தெரியாது
தான் கவின் தென்றலாவோமா? கடும்புயலாய்ப் போவோமா என
அவையெல்லாம் உணர்ச்சியில்லா அல்திணையாம்
உள்ளத்துள் பொதிந்திருக்கும் உயர்ச்சியையும் வீழ்ச்சியையும்
உணர முடியாதபோது மனிதன் மட்டும் உயர்திணையா என்ன? 
                                                                                                                                       -- பாவலர் பொன்.க



திங்கள், 8 ஏப்ரல், 2013

                                 புதுக்கோட்டையில் இயங்கி வரும்  கவிதைப் படைப்பாளிகளுக்கான கவிஞர் மன்றம்.
                                   கடந்த 07.07.2013 ஞாயிறு மாலை இம்மன்றத்தின் திங்கள் கூட்டம் கவிஞர் மீரா.சுந்தர் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. கவிஞர் வீ.கே.கஸ்தூரிநாதன் அவர்கள் முன்னிலையேற்றார். கவிஞர் மன்றத் தலைவர் நிலவை பழனியப்பன் அவர்கள் வந்திருந்த படைப்பாளிகளை வரவேற்றார்.
பாவலர் பொன்.கருப்பையா அவர்கள் படைப்பாளிகளின் சமூகக் கடமைகள் பற்றித் தனது தொடக்க உரையில் குறிப்பிட்டார்.  மாற்றம் எனும் இசைப் பாடலுடன் அவர் கவித்தேரின் வடக்கயிற்றைத் தொட்டிழுக்க கவிஞர்கள் கவிச்ரங்களைத் தொடுத்து கவித்தேர் ஊர்வலத்தை அழகுறுத்தினர்.
                                                    மாற்றம் - இசைப்பாடல் - பாவலர் பொன்.க
மாறுமுன்னு சொன்னீகளே மண்ணெல்லாம்  பொன்னாக
மணக்க வாக்குத் தந்தீகளே மல்லிகைப்பு செண்டாக
மறக்கணுன்னு நெனைச்சோமே மண்டியிட்டுக் கெடந்ததெல்லாம்
மறக்கவும் முடியலையே மண்ணும் பொன்னா மாறலையே.

மாறலைன்னு சொன்னதிங்கே யாருங்க - எல்லாம்
மாறிப்போச்சு மேலும்கீழும் தானுங்க
மணக்கலேன்னு சொன்னவங்க யாருங்க - ஊழல
மலிஞ்சுபோயி மணக்குதெங்கும் தானுங்க                  -- மாறலைன்னு

பாலும் தேனும் இங்கே ஆறா ஓடுமுன்னு
                    வாக்குக்கேக்க வந்தவங்க பேச்சுங்க
பாட்டாளி தாகத்துக்குப் பச்சத்தண்ணி கூட இப்பப்
                    பன்னாட்டு மூலதனம் ஆச்சுங்க
சேத்துல வெளைஞ்சதெல்லாம் சோத்துக்கு மாத்துகிற
                   பாத்தியமும் அந்நியருக் காச்சுங்க
ஏத்துன வெலவாசி எறங்குமா என்பதெல்லாம்
                   காத்துல பறந்தபஞ்சு ஆச்சுங்க                        --- மாறலைன்னு

மதுக்குடிச்சா மதியழிஞ்சு மானங்கெட்டுப் போகுமுன்னு
                  மதுஒழிக்கப் போராடுன நெலைஒன்னு
மானங்கெட்ட வருவாயில மதுக்கடைங்க பெருகவச்சு
                 மாணவனும் கெட்டுப்போன நெலைஎன்ன?
வெள்ளரிக்கா வித்தகாசும் வெளிநாடு போச்சுதுன்ன
                  வீக்கம்வரும் பணத்துக்குன்னு சொன்னாங்க
வெளிநாட்டு வங்கிகளில் நம்நாட்டுக் கொள்ளைப்பணம்
                  கறுப்புவெள்ளையா  மாறிக்கெடக்கு பாருங்க ---மாறலைன்னு

கார்கில்லு சவப்பெட்டி காமன்வெல்த் ஆதர்சு
                 ஸ்பெக்ட்ரம் நிலக்கரியும் கிரானைட்டும்
கெணறுவெட்டக் கௌம்பிவந்த புதம்விட்டக் காத்தைப்போல
                ஹெலிகாப்டர் ஊழல்களும் நாறுது
வாய்மையே வெல்லுமென்னும் வாசகத்தின் கீழிருந்து
               ஆள்வோர்கள் அறவழிக்கு மாறணும்
 வாழும்மக்கள் வறுமைநீக்க வாய்ப்பான செயலுபட்டு
                வளமான நாட்டை முன் னேற்றணும்.

மாறிப்போகும் எல்லாம்அப்பத் தானுங்க -மக்கள்
மனசுவச்சா மாற்றம் உருவாகுங்க.