திங்கள், 17 ஜூன், 2013

உலக அன்னையர் நாள்

அனைத்துலக அன்னையர் நாளில் அன்னையின் பெருமை பகரும்  பாடல்

                                             நெஞ்சம் மறக்குமோ?

கருவாய்நான்    உருவான    போதே - என்னைக் 
                     கருத்தாகக்      காத்து வளர்த்த      தாயே
இணையாக      உனக்கென்றும்       நீயே - நல்
                    ஏற்றமதை      ஊற்றாய்த்       தந்தாயே                      -- கருவாய்

உதிரத்தை    உருக்கிப்          பாலூட்டி             வளர்த்தாய்
உறங்கிட     வேஎனக்குத்    தாலாட்டு          இசைத்தாய்
உனக்குற்ற  சுகமெல்லாம் எனக்குள்ளே    புதைத்தாய்
உனக்கேதும்  கைம்மாறு   வருமென்றா     நினைத்தாய்?   -- கருவாய்

அம்மா    எனும்சொல்லால்    அதரத்தை     அசைத்தாய்
அப்பா     எனும்உறவை            அறிமுகம்      அளித்தாய்
அறிவினை   ஊட்டும்முதல்  ஆசானாய்     அமைந்தாய்
அரசாளும்    நிலைவரினும்  அவர்க்கென்றும்  நீயேதாய்   -- கருவாய்

நன்னெறியில்   பிள்ளைசெல்ல   நாளும்நீயே          உழைத்தாய்
நலங்கெட்டு      நலிந்தபோதும்   பிள்ளையென்றே அணைத்தாய்
நானிலத்தும்      நலம்பெருக           மனிதகுலம்          படைத்தாய்
நாள்தோறும்     வணங்கிடவே   நயந்துநெஞ்சில்   நிலைத்தாய்  -- கருவாய்

                                                                                              -- பாவலர் பொன்.கருப்பையா
                                                                                                             புதுக்கோட்டை