சனி, 13 ஜூலை, 2013

                    புதுக்கோட்டை கவிஞர் மன்றத்தின் திங்கள் கூட்டம் 13.07.2013 அன்று புதுக்கோட்டையில் நடைபெற்றது.

                   கவிராசன் இலக்கிய மன்றத் தலைவர் கவிஞர் நா.கண்ணன் தலைமையேற்றார். கவிஞர் மன்ற நிறுவனர் நிலவை பழனியப்பன் அனைவரையும் வரவேற்றார்.

                   பாவலர் பொன்.கருப்பையா, கவித்தேர் நிகழ்வினை,“ தாய்“ பாடலுடன் தொடங்கி வைத்தார். தொடக்க உரையில் அண்மையி்ல் முனைவர் பட்டம் பெற்ற வீ,கே. கஸ்தூரிநாதன்  சிறப்புகளைச் சொல்லிப் பாராட்டினார்., கவிஞர் மன்றம் அவ்வக்கால சமூக நிகழ்வுகளின் பாதிப்புகளைப் பதிவு செய்ய வேண்டியதையும் வலியுறுத்தினார். 

                  கவிஞர்கள் புலவர் மா.நாகூர், பொன்னுச்சாமி,  உப்பைத் தமிழ்க் கிறுக்கன், சுகுமாறன், கண்ணதாசன், கண்ணன் , முனைவர் வீ.கே.கஸ்தூரி நாதன் ஆகியோர் கவித் தேரின் வடம் பிடித்தனர்.

                 எழுத்தாளர்    ந. சோலையப்பன் அவர்களின்“ மாமனிதன்சிறுகதை சென்னை சிறுகதைப் போட்டியில் இரண்டாம் பரிசு பெற்றமை பாராட்டப் பெற்றது.

                 கண்ணதாசன் நன்றி கூறினார்.

கவித்தேரில் வலம் வந்தவை
ஏன் இந்த சாதித் தொல்லை?
உடலுக்குச் சாதி சொல்லி உலவுவோரே
உயிருக்குச் சாதி சொல்ல உதவுவீரோ?
தவறு செய்தோரைத் தட்டிக் கேட்டால்,
அவதூறு எனச் சொல்லி அணிதிரண்டு ஆர்ப்பரிப்பான்,
தட்டிக் கேட்டவனும் கோலெடுத்துக் கூடிடுவான்,
கரந்தையும் வெட்சியும் கண்கலங்கி நின்றிடும்!
காலத்தின் கோலத்தை மௌனமாய்ப் பார்த்திடும்!
இலஞ்சத்தில் சாதியில்லை - வேசியின்
மஞ்சத்தில் சாதியில்லை - வாக்கிற்கு
கொஞ்சலில் சாதியில்லை - செய்யும் 
வஞ்சத்தில் சாதியில்லை - சத்திரக் 
கஞ்சியி்ல் சாதியில்லை - உயிருக்குத் 
தஞ்சத்தில் சாதியில்லை - உனக்கேன் 
இந்தச் சாதித் தொல்லை?
உடலுக்குச் சாதி சொல்லி உலவுவோரே
உயிருக்குச் சாதி சொல்ல உதவுவீரோ?           
                                                                        -- புலவர் மா. நாகூர்


விவசாயத் தொழிலாளி...
மாட்டையும் ஓட்டி ஏரையும் புட்டி
மாடோடு மாடாய் உழைப்பார் - அவர்
மண்குடிசையிலே வசிப்பார்- அவர்
மண்ணானவர் பொன்னானவர்
கண்ணானவர் புண்ணானவர்
மாறா உழைப்பினால் கறுப்பார் - அவர்
மனம்விட்டு எப்போது சிரிப்பார்?

வாட்ட வடிவம் வளையக் குழைய
வாழ்நாள் வறுமையில் இழந்தார் - வேர்வை
வானத்து மேகமாய்ப் பொழிந்தார்- என்றும் 
தொலையாதுயர் அலைபோல்வர
மலையாமனம் உலைபோலிர
வாரிசையும் வாட்டிப் பிழிந்தார் - வஞ்ச
வலைப்பட்ட மான்போல நலிந்தார்.

காட்டையும் வெட்டி மேட்டையும் தட்டி

கழனியாய்  ஆக்கி உழுவார் - புளித்த
கஞ்சியைப் பார்த்து நெளிவார் - அந்தக் 
கடவுளை எந்நாளும் தொழுவார் - இந்த
இகமீதினில் அகவாழ்வினை
பகையேபெற அடடாஅட
சோகத்தினால் மனம் அழுவார் - கடன்
சுமைமாறி என்றைக்கு எழுவார்?

ஏட்டுச் சுரைக்காயின் கூட்டுக்கறிபோல
ஏலேலோ என்றவர் பாடு - உடம்பு
எலும்பெலும்பாகிய கூடு - அது
எண்ணைக் கொதிகருவாடு - என்றும்
கந்தைத்துணி பந்தப்பட
நெஞ்சக்குழி தந்தத்தன
எங்கும் அவரோட தேட்டு - அவர்
ஏக்கம் திறக்காத புட்டு    
                                                               - உப்பைத் தமிழ்க்கிறுக்கன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக