வியாழன், 25 ஏப்ரல், 2013

வாசிப்போம் புத்தகம் - உலகப் புத்தக நாள் -2013

அறிவைச்     செலுத்திடும்     ஆயுதம்       புத்தகம்
ஆற்றலைக்  கிளப்பியே   வளர்த்திடும்  புத்தகம்
இலக்கிய       இன்பத்தை     ஈந்திடும்          புத்தகம்
ஈட்டிடும்    செல்வத்துள்   ஏற்றமாம்        புத்தகம்
உலகத்தை உணர்த்திடும் உன்னதம்       புத்தகம்
ஊரெல்லாம்    ஓர்நிலை   காட்டிடும்        புத்தகம்
எளிமையாய் எதனையும் இயம்பிடும்   புத்தகம்
ஏற்றநல்    நண்பனாய்      என்றுமே           புத்தகம்
ஐயங்கள்  தீர்த்திடும்       அருமருந்து      புத்தகம்
ஒழுக்கத்தை ஊட்டிடும்  உயர்நெறி        புத்தகம்
ஓங்கிடும்   பாங்கினை   உரைப்பது         புத்தகம்
ஔடமாய் அறியாமைப் பிணிதீர்க்கும் புத்தகம்
கனிவுடன்  பேசிநல்     கைகோர்க்கும்    புத்தகம்
காலத்தின்  சீர்மையைக்  காட்டிடும்        புத்தகம்
சஞ்சலம்    தீர்த்திடும்     சஞ்சீவி                புத்தகம்
சாகாவரம்  பெற்ற           சரித்திரம்             புத்தகம்
தலைமுறைப் பண்பாட்டைக் காப்பது   புத்தகம்
தாங்கிடும்   வலிமையைத்   தருவது       புத்தகம்
நலமுறும்  வழிகளை   நவில்வது             புத்தகம்
நாளைய    மாற்றத்தின்  நறுந்துணை      புததகம்
பழமையில் புதுமையைக் காட்டிடும்       புத்தகம்
பாங்குற   மனிதத்தைக்   காத்திடும்           புத்தகம்
புரட்சியை இசைத்திடும் புல்லாங்குழல் புத்தகம்
புபாளம்   பாடிப்புதுத்     தெம்புட்டும்            புத்தகம்
மனதிற்குள்  மகிழ்ச்சியை  மலர்த்திடும்  புத்தகம்
மானுடப்  பண்பினை   வளர்த்திடும்          புத்தகம்
வரலாறு     காட்டிடும     வாயில்கள்           புத்தகம்
வாழ்க்கையை வளமாக்க  வாசிப்போம்  புத்தகம்     --- பாவலர் பொன்.க


                                                                                     அளவை

எல்லாம் இருக்கிறது
ஆனால்
எதுவும் இல்லை!
எல்லோரது வாழ்வும்
இப்படித்தான் இருக்கிறது!
வாழும்போது
 வாழ்க்கை புரியவில்லை
வாழ்க்கை முடிந்தபோது
வாழ்ந்ததே தெரியவில்லை
சரியாக வாழ்வதுதான்
 சரித்திரமாகும் என்று
தவறாமல் சொல்லுகிறோம்
தவறாகவே
வாழ்ந்து முடிக்கிறோம்
மோகப் பேய் என்றும்
மேகப்பேய் என்றும்
வேகமாய்ப் பெண்ணை
விமரிசனம் செய்கிறோம்
தாகம் எடுத்தால்
தண்ணீர் கேட்டுத் 
தாய்க்குலத்திடம்தான்
கையை நீட்டுகிறோம்
அத்தனை ஆண்களும் 
அயோக்கியர்கள் என்று
மொத்தமாய்ப் பெண்கள்
முனகுவது கேட்கிறது
அத்தனைக் காரணம்
அவர்கள் தானென்று
எத்தனை பேருக்கு
இங்கே உரைக்கிறது
இப்படியேதான் இங்கே
எல்லாம் நடக்கிறது
இருந்தும் வாழ்வு
யாருக்குப் புரிகிறது?
நாளும் பொழுதும் 
நாம் அனைவரும் 
அளந்து கொண்டுதான் இருக்கிறோம்
அடுத்தவர் வாழ்வை
நம்மை நாமே 
அளக்கும் நாள் என்று?
நல்லது அனைத்தும் 
நமக்கு வரும் அன்று.          -- கவிஞர் வீ.கே.கஸ்தூரிநாதன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக